சிஎஸ்கே - ஆர்சிபி ரசிகர்கள் மோதல் விவகாரம்: இந்திய முன்னாள் வீரர் கண்டிப்பு

2 hours ago 2

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி இன்று தொடங்குகிறது.

ஐ.பி.எல். வரலாற்றில் ரசிகர்களிடையே செல்வாக்கு மிகுந்த அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளங்கி வருகின்றன. இதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் மைதானம் முழுவதும் ரசிகர்கள் சம அளவில் அணிவகுத்து நிற்பர்.

முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை அணியை தோற்கடித்து பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனை அந்த அணியின் வீரர்களும், ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர். அன்றைய நாள் முதல் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்களிடையே மோதல் நிலவி வருகிறது.

இதனிடையே இந்த வருடம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை - பெங்களூரு போட்டியின்போது ஆர்சிபி ரசிகர்களை கிண்டலடிக்கும் விதமாக சிஎஸ்கே ரசிகர்கள் நடந்து கொண்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியின்போது 2016, 2017 ஆகிய வருடங்களில் சிஎஸ்கே அணி ஐ.பி.எல். தொடரில் விளையாடத் தடை பெற்றதை கிண்டல் செய்யும் விதமாக கருப்பு வெள்ளை (ஜெயில் ஜெர்சி) டீசர்ட் வாங்கி அதனை மைதானத்திற்கு கொண்டு வந்து கிண்டலடித்தனர்.

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்விரு அணிகளின் ரசிகர்களின் மோதலை கண்டிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அது மிகவும் தீவிரமாக இருந்தது. மைதானத்திற்கு வெளியே பேருந்து கிளம்பும்போது ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே வீரர்களை கேலி செய்தனர். அது நான் பார்த்த ஒரு விஷயம், அது மோசமானது என்று நான் நினைத்தேன். நான் பார்த்த மற்றொன்று ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது. பெண்கள் கேலி செய்யப்படுவதை நான் பார்த்தேன். இது மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது, மிகவும் நேர்மையாகச் சொன்னால் கடந்த வருடம் சென்னை மைதானத்திலும் இவ்வாறு நடந்ததைப் பார்த்தோம்.

இது மிகவும் தீவிரமாகிவிட்டது. அவர்கள் கருப்பு கோடுகளால் குறிக்கப்பட்ட வெள்ளை டி-சர்ட்களை பிடித்துக்கொண்டு, சிஎஸ்கே- வுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதில் தோனியின் எண்ணையும், அதன் கீழ் 'தல' என்பதையும் எழுதி சிஎஸ்கே அணி 2 வருடங்கள் சிறைக்கு சென்றதாக கிண்டலடித்தனர். இது விளையாட்டிற்கு அப்பாற்பட்டதாக மாறி வருகிறது. இது எனக்கு கவலை அளிக்கிறது. ஏனென்றால் நாளின் இறுதியில், இது ஒரு விளையாட்டு" என்று கூறினார். 

Read Entire Article