
ஜெய்ப்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களும், ஷசாங் சிங் 59 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் துஷர் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்களும், ஜெய்ஸ்வால் 50 ரன்களும் அடித்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், மார்கோ யான்சென், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த தோல்விக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில், "நாங்கள் இந்த ஆட்டத்தில் நன்றாக தொடங்கினோம். பவர்பிளேயில் 90 ரன்கள் அடித்து கொடுத்த எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்களிடம் இருந்து இதற்கு மேல் எதையும் எதிர் பார்க்க முடியாது. ஆனால் பவர் பிளே முடிந்ததும் எங்களால் அதே வேகத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. எங்களிடம் இருந்த பவர்-ஹிட்டர்களுடன் இது ஒரு துரத்த கூடிய இலக்காக இருந்தது.
கடைசி நேரத்தில் அதை அடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனாலும் அதை நாங்கள் செய்ய வேண்டும். அனுபவம் வாய்ந்த 2 வீரர்கள் பொறுப்பேற்று தங்கள் வேலையைச் செய்திருக்க வேண்டும். அடுத்த சீசனில் நிச்சயமாக நிறைய முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும். நாங்கள் அதிகம் முயற்சி செய்ய முடியாது. எங்களுடைய அடுத்த இலக்கு சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான அடுத்த போட்டியை வெல்வதுதான்" என்று கூறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.