பொன்னமராவதி, மே 5: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி வார்ப்பட்டு சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி, வார்ப்பட்டு வழியாக பிரான்மலை செல்லும் சாலை போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாகும். பாரி ஆண்ட பரம்புமலை எனப்போற்றப்படும் பிரான்மலையில் இந்து மற்றும் இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. இதனால், நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களைச்சார்ந்த பொதுமக்கள் பிரான்மலைக்கு வந்து செல்கின்றனர். வேந்தன்பட்டியிலிருந்து வார்ப்பட்டு வழியாக பிரான்மலை செல்லும் இந்த சாலை வழியாக மதுரை, சிங்கம்புணரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சாலையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சி-மதுரை நெடுஞ்சாலை உள்ளது. எனவே திருச்சி, மதுரை செல்கின்ற வாகனங்களும் இச்சாலையில் அதிகம் செல்கின்றன. மேலும், இச்சாலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாகும். இதனால் போக்குவரத்து மிகுந்த இச்சாலை அகலம் குறைவாக இருப்பதால் எதிரெதிரே இரண்டு பேருந்துகள் வந்தால் கடந்து செல்வது மிக சிரமமாக உள்ளது. மேலும், அவசரகாலத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 108 வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளது. எனவே, இச்சாலையை அகலப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.