சார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 11 ஆண்டு தலைமறைவான கேரள நபர் கைது

18 hours ago 2

மீனம்பாக்கம்: சார்ஜாவிலிருந்து நேற்று நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில், கேரளாவில் நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகளில் 11 ஆண்டுகள் தலைமறைவான நபரை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், மலப்புரம் அருகே திருரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பஷீர் (53). இவர்மீது கடந்த 11 ஆண்டுகளுக்கு அப்பகுதி காவல் நிலையத்தில் நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகள் பதிவாகியிருந்தன. இவ்வழக்குகள் தொடர்பாக அப்துல் பஷீரை கைது செய்து விசாரிக்க கேரள போலீசார் தேடி வந்தனர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்து, அவர்களிடம் பிடியில் சிக்காமல் வெளிநாட்டுக்கு அப்துல் பஷீர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய அப்துல் பஷீரை கைது செய்ய, கடந்த ஆண்டு கேரள மாநில மலப்புரம் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, கடந்த 2024ம் ஆண்டு அப்துல் பஷீரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக மலப்புரம் காவல் ஆணையர் அறிவித்தார். மேலும், அனைத்து விமான நிலையங்களில் அப்துல் பஷீர்மீது எல்ஓசி போடப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை வெளியே அனுப்பி கொண்டிருந்தனர். இதே விமானத்தில், கேரள மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளியான அப்துல் பஷீரும் வந்திருந்தார்.

அவருடைய ஆவணங்களை கம்ப்யூட்டரில் வைத்து சோதனை செய்தபோது, அவர் கேரள போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அப்துல் பஷீரை வெளியே விடாமல் கைது செய்து, ஒரு தனியறையில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து மலப்புரம் காவல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளி அப்துல் பஷீரை சென்னை விமானநிலைய போலீசில் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை போலீசார் காவலில் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சார்ஜாவில் இருந்து சென்னை வந்தபோது விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளி அப்துல் பஷீரை கேரளாவுக்கு அழைத்து செல்ல, மலப்புரம் காவல்துறையின் தனிப்படையினர் சென்னை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 11 ஆண்டு தலைமறைவான கேரள நபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article