
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களம் இறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. இந்த இணையை ஹர்திக் பாண்ட்யா பிரித்தார். பாண்ட்யா பந்துவீச்சில் சுப்மன் கில் 38 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் களம் புகுந்தார். அதிரடியில் மிரட்டிய பட்லர் 39 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய ஷாரூக் கான் 9 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்த நிலையில் 63 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த தெவாடியா ரன் எடுக்காமலும், ரூதர்போர்டு 18 ரன்னிலும், ரஷித் கான் 6 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை ஆட உள்ளது.