
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் கடந்த 21ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 39 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்துள்ள சீனியர் வீரர் ரஷித் கான் தொடக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 4 ஓவர்களை வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் இப்படி சிறப்பாக பந்துவீசுவதற்கு சாய் கிஷோர் கொடுத்த அறிவுரைகளும் காரணம் என ரஷித் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில்,
ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் நானும், சாய் கிஷோரும் நிறைய பேசிக் கொள்கிறோம். அவரிடம் நான் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது குறித்த திட்டத்தை ஆலோசித்துக் கொள்வேன். அதேபோன்று அவரும் இந்தியாவில் உள்ள ஆடுகளத்தின் தன்மையை மிகச் சரியாக எனக்கு கூறி அதற்கு ஏற்றார் போல் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
அவரிடம் இருந்து நான் அதனை கற்றுக் கொள்கிறேன். தற்போது அவரைப் போலவே நானும் சிறப்பாக பந்துவீச முயற்சிக்கிறேன். என்னுடைய அனுபவத்தையும் நான் அவரிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவரும் இந்திய ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை என்னிடம் பகிர்கிறார். அதிலிருந்து நல்ல அறிவுரைகளை எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.