![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/31/36773328-dilku.webp)
கேப்டவுன்,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் இடம் பெற்றுள்ளார்.
முன்னதாக இந்த தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் இந்திய அணியில் அசத்தப்போகும் வீரர் யார்? என்பது குறித்து தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "குல்தீப் யாதவ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார். எனவே அவர் நிச்சயம் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்பதை நான் உணர்கிறேன். ஏனெனில் துபாயில் உள்ள மைதானங்களில் மட்டும்தான் இந்தியா விளையாட உள்ளது. அது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனால் நிச்சயம் அவரால் அங்கு சிறப்பாக செயல்பட முடியும். ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் அவர் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார்" என்று கூறினார்.