சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு எதிராக சதம்.. முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி

2 months ago 5

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 5-வது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் சதமடிப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா 91 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. 

Read Entire Article