நாக்பூர்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம், சாம்பியன்ஸ் டிராபியுடன் நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா, "என்ன மாதிரியான கேள்வி இது. டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டிகள் வித்தியாசமானவை. எப்போதும் மேடு பள்ளங்கள் இருக்கும் என்பது வீரர்களான எங்களுக்குத் தெரியும். அதை எனது கெரியரில் நிறைய எதிர்கொண்டுள்ள எனக்கு இது புதிதல்ல. ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு நாளும் புதிது என்பதால் கடந்த காலத்தை பார்க்காமல் வருங்கால சவால்களை நான் எதிர்நோக்கியுளேன்.
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வரவிருக்கும் நிலையில் என்னுடைய ஓய்வு பற்றி இங்கு பேசுவதில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?. இது போன்ற செய்திகள் பல வருடங்களாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்கான விளக்கத்தைக் கொடுப்பதற்காக இங்கே நான் இல்லை. தற்போதைய போட்டிகளில் நான் கவனம் செலுத்துகிறேன். அதன் பின் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்" என்று கூறினார்.