சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன..? வங்காளதேச கேப்டன் விளக்கம்

23 hours ago 3

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று நடந்த 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஹிரிடாயின் அபார சதத்தின் உதவியுடன் கவுரமான நிலையை எட்டியது. 49.4 ஓவர்கள் விளையாடிய வங்காளதேச அணி 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். வங்காளதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தாங்கள் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசை சாண்டோ சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பவர்பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு இப்போட்டியில் தோல்வியை கொடுத்தது. ஹிரிடாய் - ஜேக்கர் அலி அபாரமாக பேட்டிங் செய்தனர். ஆனாலும் நாங்கள் களத்தில் தவறுகள் செய்தோம். கேட்சுகள் தவற விட்டு ரன் அவுட் வாய்ப்புகளை தவற விட்டோம். அதை செய்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஹிரிடாய் - ஜேக்கர் இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக கவரும் வகையிலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அதைத் தொடர்வார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் அணியில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவை என்று நான் நினைக்கவில்லை. புதிய பந்தில் நாங்கள் விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நாங்கள் சமீபத்தில் விளையாடினோம். எனவே அங்குள்ள சூழ்நிலைகளுக்கு எங்கள் வீரர்கள் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று உறுதியாக சொல்வேன்" என கூறினார்.

Read Entire Article