சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த கருண் நாயர்

1 week ago 2

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதே சமயம் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், கருண் நாயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதில் கருண் நாயர் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி விதர்பா அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 5 சதம் உள்பட 779 ரன்கள் அடித்தார். அதன் காரணமாக அவருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறாதது குறித்து கருண் நாயர் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "உண்மையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பற்றி நான் சிந்திக்கவில்லை. எனக்கு அது மிகவும் தூரத்தில் இருக்கிறது. இருப்பினும் நீங்கள் கனவு கண்டு சிந்தித்து சாதனைகளை செய்ய விரும்புவீர்கள். எனவே உங்களால் முடியாது என்று நினைக்கக் கூடாது. முடியும் என்று நினைக்க வேண்டும். அது நடக்குமா இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கும். ஏற்கனவே சொன்னது போல் இப்போதும் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் கனவு என்னிடம் இருக்கிறது.

அந்தத் தொடருக்கு கருதப்படுவேன் என்று கூட நான் நினைக்கவில்லை. இருப்பினும் அதற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். உங்களுடைய இளம் வயது ஹீரோவிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு சிறந்த அங்கீகாரமாகும். அது அற்புதமான தருணம். எனக்காக வாழ்த்து தெரிவித்த சச்சினுக்கு நன்றி. இங்கிருந்து நான் தொடர்ந்து கவனத்துடன் நன்றாக விளையாட வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article