![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39044878-satyendra-das-amit-shah.webp)
லக்னோ:
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது (85). லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் அவர் உயிர் பிரிந்தது. இத்தகவலை அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அவர் இன்று காலமானார். அவரது உடல் நாளை அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் தகனம் செய்யப்படும்' என்றார்.
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவு ஆன்மிக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவு, துறவிகள் சமூகத்திற்கும் பக்தர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு" என குறிப்பிட்டுள்ளார்.
"ராம பக்தர்களிடையே பக்தி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருந்த ஆச்சார்யா எப்போதும் தனது வாழ்க்கையை பகவானின் சேவைக்கும் பக்தர்களின் வழிகாட்டுதலுக்கும் அர்ப்பணித்தார். ராம ஜென்மபூமி இயக்கத்தில் அவர் தீவிரமாக பங்காற்றினார். அவரது ஆன்மா பகவான் ஸ்ரீ ராமரின் தாமரைப் பாதங்களில் இளைப்பாறட்டும். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அந்த துக்கத்தில் இருந்து மீளும் வலிமையை பகவான் வழங்கட்டும். ஓம் சாந்தி" எனவும் அமித் ஷா கூறி உள்ளார்.