
லாகூர்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் களம் இறங்கினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து செடிகுல்லா அடல் களம் புகுந்தார். மறுபுறம் இப்ராகிம் ஜட்ரான் 22 ரன்னிலும், அடுத்து வந்த ரஹ்மத் ஷா 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட செடிகுல்லா அடல் 85 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் ஹஸ்மத்துலா ஷாகிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஜோடி சேர்ந்தனர். இதில் ரன் அடிக்க தடுமாறிய ஹஸ்மத்துலா ஷாகிதி 49 பந்தில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த முகமது நபி 1 ரன்னிலும், குல்பைடின் நைப் 4 ரன்னிலும், ரஷித் கான் 19 ரன்னிலும் அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய உமர்சாய் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.