![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39021912-aus.gif)
சிட்னி,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய அனைத்து ஆட்டங்கள் மற்றும் முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி நடைபெறும் இடம் இந்திய அணி தகுதி பெறுவதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கணுக்கால் காயம் காரணமாக கம்மின்ஸ் பங்கேற்பதில் சிக்கல் நிலவியது. அதேபோல் மற்றொரு முன்னணி வீரரான ஜோஷ் ஹெசில்வுட்டும் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்குவது கடினம் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய இருவரும் விலகினர். மேலும் கேமரூன் கிரின், மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரும் இந்த தொடரில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய முன்னணி வீரர் மிட்சல் ஸ்டார்க் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிட்சல் மார்ஷ், கேமரூன் கிரீன், ஸ்டாய்னிஸ், பேட் கம்மின்ஸ் ஆகியோரை தொடர்ந்து ஸ்டார்க்கும் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியை அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் இந்திய அணி சந்தித்தால் அப்போது முக்கிய வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் டிராபி அணி:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா. பயண இருப்பு: கூப்பர் கோனொலி.