சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி: அந்த ஒரு பவுலரை சமாளித்து விட்டால் விராட் கோலி அசத்துவார் - ராயுடு கணிப்பு

4 hours ago 2

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சமீப காலமாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கடும் சவால் அளித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் ஆகிய தொடர்களில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா இம்முறையும் பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த போட்டியில் நட்சத்திர வீரரான விராட் கோலி அசத்தினால் இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலிக்கு சுழலுக்கு சாதகமான துபாயில் ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா சவால் கொடுப்பார் என்று இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அதை சமாளித்து விட்டால் விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைக்க வாய்ப்புள்ளதாகவும் ராயுடு கணித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது விராட் கோலி - ஆடம் ஜம்பா இடையேயான போட்டியாக செல்லும். சமீப காலங்களில் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் தடுமாறியுள்ளார். ஆனால் இந்த தொடரில் அவர் இருக்கும் பார்ம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரை நன்றாக அழைத்து செல்லும். வெற்றி நோக்கத்துடன் விளையாடும் அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற கவனம் விராட் கோலியின் கண்களில் இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

பெரிய போட்டிகளில் பொதுவாக விராட் கோலி சவால்களை சமாளித்து கொண்டாடக்கூடிய தருணங்களை கொடுக்கக் கூடியவர். துரதிர்ஷ்டவசமாக நியூசிலாந்துக்கு எதிராக பிலிப்ஸ் நம்ப முடியாத கேட்ச் பிடித்ததால் அவர் ஆட்டமிழந்தார். அது அவர் பக்கம் அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நாள். இருப்பினும் அரைஇறுதியில் விராட் கோலி பெரிய ரன்கள் அடிபார் என்று நம்பலாம். அவருக்கு நமது முழுமையான ஆதரவு இருக்கிறது" என்று கூறினார்.

Read Entire Article