
சென்னை,
2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், 9.50 சதவீதம் அல்லது அதற்கு குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு இந்த விலை நிர்ணயம் செய்யப்படும்.
9.85 சதவீதம் சர்க்கரைத் திறன் கரும்புக்கு ரூ.3,267 ஆகவும், 10.10 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344.20 ஆகவும், 10.65 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.
கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு விலையை நிர்ணயம் செய்யும். மாநில அரசின் ஊக்கத்தொகையும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை ஆலைகளும், 16 தனியார் ஆலைகளும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.