மும்பை : சாம்பியன்ஸ் கோப்பையில் கலந்து கொள்ளும் இந்திய அணி நாளை துபாய் புறப்பட்டு செல்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த இந்திய அணி துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடக்க இருக்கிறது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அது துபாய்க்கு மாற்றப்படும். இல்லையென்றால் பாகிஸ்தானில் நடக்கும். இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பிசிசிஐ இருக்கிறது. காரணம் டி20யில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டாலும், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி வரை வந்து கோட்டை விட்டது. அது மட்டுமின்றி கோஹ்லி, ரோகித் ஆகியோர் ஆஸ்திரேலியா தொடரில் பெரிய அளவில் சோபிக்காததால் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று ரசிகர்களின் நன்மதிப்பை பெறும் முயற்சியில் இருக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி வீரர்களுடன் அவர்களுடைய மனைவிகள் வந்து தங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனால் துபாய்க்கு மனைவிகளுடன் கிரிக்கெட் வீரர்கள் வந்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கம்பீர் முடிவெடுத்திருக்கிறார். மேலும் துபாயில் 3 வாரம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மொத்தமுள்ள மூன்று லீக் ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இந்தநிலையில் வீரர்களுடன் மனைவிகள் வந்தால் அது வீரர்களின் கவனத்தை சிதறடிக்கக் கூடும் என்பதால் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் இந்த தொடருக்கு வரக்கூடாது என கம்பீர் பிசிசிஐயிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் பிசிசிஐயும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு மனைவிகளை அழைத்துச் செல்லக்கூடாது என வீரர்களிடம் கறாராக கூறி இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; மனைவிகளை அழைத்து செல்ல வீரர்களுக்கு தடை: பிசிசிஐ `கறார்’ appeared first on Dinakaran.