துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணி 241 ரன் எடுத்தது. அதையடுத்து ஆடிய இந்தியா 42.3 ஓவரில் விராட் கோஹ்லியின் அதிரடி சதத்தால் 244 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்காக துபாயில் நேற்று நடந்த 5வது ஒரு நாள் போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் களம் கண்டன. டாஸ் வென்ற பாக் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் அஸம், இமாம் உல் ஹக் களமிறங்கினர்.
அணியின் ஸ்கோர் 41 ஆக இருந்தபோது பாபர் அஸம் 23 ரன்னில் ரன் அவுட்டானார். பின் சாட் ஷகீல், இமாமுடன் இணை சேர்ந்தார். அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா நேர்த்தியாக வீசிய பந்தை எதிர்கொண்ட இமாம், விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் தந்து, 10 ரன்னில் நடையை கட்டினார். அதையடுத்து கேப்டன் முகம்மது ரிஸ்வான் களம் புகுந்தார். ரிஸ்வானும் ஷகீல் ஜோடி சேர்ந்து 104 ரன்களை சேர்த்த நிலையில், 33வது ஓவரின்போது அக்சர் படேல் பந்தில் ரிஸ்வான் (46 ரன்) கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா வீசிய மந்திரப் பந்து ஷகீலின் (62 ரன்) பேட்டில் பட்டு அக்சர் படேல் கையில் அற்புதமான கேட்சாக மாறியது.
அடுத்து வந்த தய்யப் தாஹிர் 4, குஷ்தில் ஷா 38, ஹாஹீன் ஷா அப்ரிடி 0, நஸீம் ஷா 14, ஹாரிஸ் ராஃப் 8 ரன்னில் அவுட்டாகினர். இதனால் 49.4 ஓவர் முடிவில் பாக். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன் எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்ட்யா 2, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் வெற்றி இலக்குடன் இந்திய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். 15 பந்தில் 20 ரன் எடுத்திருந்த ரோகித், ஷாஹீன் ஷா அப்ரிடி பந்தில் கிளீன் போல்டானார்.
பின் கில்லுடன் விராட் கோஹ்லி இணை சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 17வது ஓவரில் அப்ரார் அஹமது பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில் (46 ரன்) கிளீன் போல்டானார். அதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் கோஹ்லியுடன் இணை சேர்ந்தார். 27வது ஓவரில் கோஹ்லி அரை சதம் கடந்தார். அணியின் ஸ்கோர் 214 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷ்ரேயாஸ் 56 ரன்னில் அவுட்டானார். பின் வந்த ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னில் வெளியேறினார்.
அதனால் அக்சர் படேல் களமிறங்கினார். 42.3 ஓவரின்போது விராட் கோஹ்லி பவுண்டரி விளாசி சதத்தை நிறைவு செய்தார். அத்துடன் அணியின் ஸ்கோர் 244 ஆக உயர்ந்து இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாக். தரப்பில் அப்ரிடி 2, அப்ரார், குஷ்தில் ஷா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.
* 287 இன்னிங்சில் 14,000 ரன் கோஹ்லி உலக சாதனை
பாகிஸ்தானுடன் நேற்று நடந்த போட்டியில் விராட் கோஹ்லி 14,000 ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 12வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தில் பவுண்டரி அடித்தபோது இந்த சாதனையை அவர் அரங்கேற்றினார். விராட் கோஹ்லி ஆடும் 287வது இன்னிங்ஸ் இது. கோஹ்லி, 300 இன்னிங்ஸ்களுக்குள் 14,000 ரன் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். 14,000 ரன் குவித்த வீரர் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (350 இன்னிங்ஸ்), இலங்கையின் சங்கக்கரா (378 இன்னிங்ஸ்) ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
* முதல் ஓவரில் 5 வைடு பந்துகள்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை வீசிய இந்தியாவின் முகம்மது ஷமி, 5 வைடு பந்துகளை வீசியதால் அந்த ஓவரை நிறைவு செய்ய மொத்தத்தில் 11 பந்துகளை வீச நேர்ந்தது. அந்த ஓவரில் பாக் வீரர் இமாம் உல் ஹக் எடுத்த ஒரு ரன்னையும் சேர்த்து ஷமி 6 ரன்களை முதல் ஓவரில் தந்தார். இதற்கு முன், 2017ல் சாம்பியன்ஸ் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரை முடிக்க 9 பந்துகளை வீசியிருந்தார். அந்த சாதனையை தற்போது 11 பந்துகள் வீசி ஷமி முறியடித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் முதல் ஓவரில் அதிக வைடு பந்துகளை வீசிய வீரராக ஷமி உருவெடுத்துள்ளார். இருப்பினும் ஜிம்பாப்வே அணியின் தினேஷே பன்யங்கரா, போட்டியின் ஏதாவது ஒரு ஓவரில் அதிகபட்சமாக 7 வைடு பந்துகளை வீசிய வீரராக முதலிடத்தில் உள்ளார்.
* டாசை இழப்பதில் இந்தியா சாதனை
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் துவக்கத்தில் டாஸ் போடப்பட்டபோது இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பாக். கேப்டனிடம் டாஸை இழந்தார். ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 12வது முறையாக இந்தியா டாசை இழந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா டாசை இழந்தது. அது முதல், தற்போது பாக். உடனான போட்டி வரை இந்தியா டாசை இழந்து வருகிறது. இதற்கு முன், கடந்த 2011 மார்ச் முதல் 2013 ஆகஸ்ட் வரை ஒரு நாள் போட்டிகளில் நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக 11 முறை டாசை இழந்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை இந்தியா தன் வசமாக்கி உள்ளது.
The post சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாக்.கிற்கு எதிரான போட்டியில் கோஹ்லி அதிரடி சதம் இந்தியா அமோக வெற்றி. appeared first on Dinakaran.