சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு .!!

2 hours ago 2

சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா். இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நள்ளிரவில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும், சாம்சங் தொழிற்சாலை அருகே தொழிலாளர்கள் அமைத்த போராட்டப் பந்தலையும் காவல்துறையினர் அகற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலையும் தொழிலாளர்கள் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அத்துடன் அவர்களை இழுத்து கைது செய்ய முயற்சித்தனர்.

இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய போலீஸ் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தியுள்ளார். மேலும்,வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி, அருள்முருகன் அமர்வு அறிவித்துள்ளது.

The post சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு .!! appeared first on Dinakaran.

Read Entire Article