
சென்னை,
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தால் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தினர் மற்றும் CITU தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு ஏற்பட்டது. இருதரப்பும் ஏற்றுக்கொண்டவாறு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் விபரம்;
தொழிலாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் ரூ.9,000/- 2026-2027 மற்றும் 2027-2028 ஆண்டுகளுக்கு தலா ரூ.4,500/- வீதம் மூன்றாண்டு காலத்திற்கு ரூ.18000/- நேரடி சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு கிடைக்கும். அனுபவத்தின் அடிப்படையிலான சிறப்பு ஊதிய உயர்வு மூன்றாண்டு காலங்களில் ரூ.1,000/- முதல் ரூ.4,000/- வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.
ஒருமுறை சிறப்பு பதவி உயர்வாக 31.03.2025 தேதியில் 6 வருடங்கள் முறையான பணி நிறைவு செய்து பதவி உயர்வு கிடைக்காத தொழிலாளர்களுக்கு (ஆப்ரேட்டர் 1/2/3, டெக்னிசியன் 1/2/3) சிறப்பு பதவி உயர்வு அளிக்கப்படும். கூடுதல் விடுப்பு சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பணி விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.