சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

3 months ago 21

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், கடந்த 20 நாளாக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த, வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட வேண்டி, சாம்சங் தொழிலாளர்கள் காஞ்சிபுரத்தில் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

அப்போது, பேரணியாக வந்த சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் 119 பேரை, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தி கடந்த வாரம் கைது செய்து, தனியார் திருமணம் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர், தொழிலாளர்கள் 116 பேரை விடுவித்தனர்.இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர், சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மாநில தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட முயன்ற 500க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு: சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, 100க்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article