சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் தவிர மற்ற போராட்டம் நடத்தலாம்: தொழிற்சங்கத்திற்கு ஐகோர்ட் அனுமதி

4 days ago 2

சென்னை: சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போராட்டத்தை வரும் 30ம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான எஸ்.எச்.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆஜராகி, உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்புகள் உள்ளது என்றும், ஜனநாயக ரீதியாக போராட அரசியலமைப்பு சட்டம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு வேறு வகையான போராட்டம் நடத்த ஒப்புதல் அளித்து மனுதாரர் தெரிவித்துள்ளார் என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வரும் 30ம் தேதி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போராட்டத்தை நடத்தலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

 

The post சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் தவிர மற்ற போராட்டம் நடத்தலாம்: தொழிற்சங்கத்திற்கு ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article