சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

1 month ago 9

சென்னை : சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பணி நேரம் குறைப்பு, தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல் துறையினர் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாகக் கூறி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று பிற்பகல் நீதிபதிகள் பாலாஜி, அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிஐடியு தரப்பில், நீதிமன்ற ஆணைப்படி அமைதியான வழியில்தான் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்ததாகவும் ஆனால் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் காவல் துறை தரப்பில் ஆஜராகி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு தடையில்லை என்று கூறினர். வழக்கையும் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

The post சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article