சாப்மேன் அதிரடி சதம்... பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து

2 days ago 3

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கனக்கில் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமானது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, மார்க் சாப்மேனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாப்மேன் 132 ரன்களும் (111 பந்துகள்), டேரில் மிட்செல் 76 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் இர்பான் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்டஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 78 ரன்களும், சல்மான் ஆகா 58 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் நாதன் சுமித் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Read Entire Article