நாகப்பட்டினம், மே 16: சான்று வழங்கப்படாத வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்கினால் அனுமதி சீட்டின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகப்பட்டினத்தில் ஆய்வுக்கு பின் கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்தார். நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நேற்று நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்து வாகனங்களை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகள் 2012 ன்படி, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு குழு வருடத்திற்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆர்டிஓ, முதன்மை கல்வி அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 37 பள்ளிகளில் இருந்து 152 பள்ளி வாகனங்களில், 127 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. இதில் 15 வாகனங்களுக்கு தகுதி இழப்பு செய்யப்பட்டது. தகுதி இழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் ஒரு வாரகாலத்திற்குள் குறைகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி சான்று பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுக்கு வராத வாகனங்கள் வரும் 31ம் தேதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
சான்று வழங்கப்படாத வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் அனுமதி சீட்டின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், வாகன போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, ஆர்டிஓ அரங்கநாதன், டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post சான்று வழங்கப்படாத பள்ளி வாகனங்களை இயக்கினால் அனுமதி சீட்டின் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.