திருவண்ணாமலை, அக்.17: திருவண்ணாமலை மாவட்டத்தில் மிதமான மழையால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. மேலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, தமிழ்நாட்டின் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை பல்வேறு இடங்களில் விட்டு விட்டு லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் மழை இல்லாமல், லேசான வெயில் சூழல் காணப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, திருவண்ணாமலையில் 2 மிமீ, செங்கம் 26.7 மிமீ, போளூர் 5 மிமீ, ஜமுனாமரத்தூர் 8.4 மிமீ, கலசபாக்கம் 4.6 மிமீ, தண்டராம்பட்டு 9.2 மிமீ, ஆரணி 14.6 மிமீ, செய்யாறு 17 மிமீ, வந்தவாசி 17.1 மிமீ, கீழ்பென்னாத்தூர் 4.4 மிமீ, வெம்பாக்கம் 24 மிமீ, சேத்துப்பட்டு 12.2 மிமீ மழை பதிவானது. மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மழைக்கான வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில், செங்கம் தாலுகா வளையாம்பட்டு, காயம்பட்டு, ேதாக்கவாடி, ஆலத்தூர், நம்மியந்தல், நயம்பாடி, படிஅக்ரகாரம், முத்தனூர், மஷார், தொரப்பாடி, எறையூர், போளூர் தாலுகா கொரால்பாக்கம், கலசபாக்கம் தாலுகா சிறுவள்ளூர் ஆகிய 13 ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற ஏரிகளில் 30 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி, வினாடிக்கு 2,190 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 98.70 அடியாகவும், கொள்ளளவு மொத்தமுள்ள 7321 மி.கனஅடியில் தற்போது 3567 மி.கன அடியாகவும் உள்ளது. அதேபோல், குப்பனத்தம் அணைக்கு வினாடிக்கு 60 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 54.03 அடியாகவும், கொள்ளளவு 576 மி.கன அடியாகவும் உள்ளது. அணைக்கு தற்போது வரும் 35 கன அடியும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மிருகண்டா அணையின் நீர்மட்டம் 18.37 அடியாகவும், கொள்ளளவு 62.41 மி.கன அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 91 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 56.25 அடியாகவும், கொள்ளளவு 226 மி.கன அடியாகவும் உள்ளது.
The post சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2,190 கனஅடி நீர்வரத்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மிதமான மழை appeared first on Dinakaran.