சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதி வழங்கும் விஷயத்தில் தெலுங்கானா மாநில அரசு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அம்மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதல் 4 நாட்களுக்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறது.
ஆனால், தமிழக அரசோ, சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. சமூகநீதியைக் காக்க தெலுங்கானா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் புரட்சிகரமானவை. இதன் மூலம் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை வெளியிட்ட 2-வது மாநிலம் என்ற பெருமையை பிகாருக்கு அடுத்தபடியாக தெலுங்கானா பெற்றிருக்கிறது.
சமூகநீதியை நிலைநாட்டுவதை நோக்கி தெலுங்கானா அரசு இந்த அளவுக்கு பயணம் செய்திருக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பதற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் தமிழக ஆட்சியாளர்களோ, இந்தப் பயணத்தில் இன்னும் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கோ, சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் விகிதத்தை மாற்றி அமைக்கவோ எந்தத் தடையும் இல்லை. ஆனால், மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி சமூகநீதிக்கு முட்டுக்கட்டை போடுகிறது தமிழக அரசு. இதன் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது கடினம் அல்ல. தெலுங்கானா மாநில அரசு வெறும் ரூ.150 கோடியில், 1.03 லட்சம் கணக்கெடுப்பாளர்களையும், 10 ஆயிரம் மேற்பார்வையாளர்களையும் கொண்டு 50 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறது. இதே காலத்தில் ரூ.300 கோடியில் இதை தமிழகத்தாலும் சாதிக்க முடியும்.
சமூகநீதி வார்த்தைகளில் வாழ்வதில்லை; செயல்பாடுகளில் தான் தழைக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தங்கள் உறக்கத்தைக் கலைத்து விட்டு, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.