சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் - டி.ஆர்.பாலு

2 hours ago 2

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் நிலையில் டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேச இருக்கிற கருத்துகள் பற்றி நாங்கள் எடுத்துக் கூறினோம். குறிப்பாக 11 பிரச்சினைகளை எடுத்து வைத்திருக்கிறோம். அதில் முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கிறது என்றும், அதனால் இட ஒதுக்கீடு பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்றும் கூறினோம்.

அதேபோல நீட் பிரச்சினை பல காலமாக நிலுவையில் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் முடிவை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் அது பற்றி மத்திய அரசு கவலைப்படாமல் இருக்கிறது. இது பற்றி எடுத்துச் சொன்னோம்.

மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி பேசியிருக்கிறோம். இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் அடிக்கடி கடிதம் எழுதி இருப்பதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கிடப்பில் கிடக்கிறது. இதையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக சொன்னோம்.

அடுத்ததாக சமக்ரா சிக்சா அபியான் திட்டத்தில் தமிழக அரசுக்கு ரூ. 2,517 கோடி வர வேண்டி இருக்கிறது. ஆனால் இதுவரை வரவில்லை. இது மத்திய- மாநில உறவுகளுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது. ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை பொறுத்தவரை ரூ.20 ஆயிரம் கோடியை மத்திய அரசு தந்திருக்க வேண்டும். ஆனால் தரவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article