புதுடெல்லி: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது என்பது கேம்சேஞ்சர் முடிவாகும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜ தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சேர்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையானது கேம்சேஞ்சர் முடிவாகும். இது பெரும்பாலான எதிர்க்கட்சிகளால் வரவேற்கப்பட்டுள்ளது. கேம்சேஞ்சர் முடிவு எங்களது உண்மையான நோக்கங்களுக்கும், எதிர்க்கட்சிகளின் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தி உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. சப்கா சாத்-சப்கா விகாஸ் என்பது பிரதமர் மோடி அரசின் கோட்பாடு மற்றும் சித்தாந்தத்தின் கருத்தாகும்.
எங்களின் அனைத்து திட்டம் மற்றும் திட்டங்களின் அடிப்படை நோக்கம் சமூக நீதியாகும். சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் அறிவியல் அடிப்படையிலான நன்மைகள், வசதிகளை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். இந்த முடிவு எடுக்கப்பட்டபோது சிலர் வருத்தமடைந்தனர். அரசு அவர்களுடையது(ஆளும் கட்சி). ஆனால் அமைப்பு முறை(system) எங்களுடையது(எதிர்க்கட்சிகள்) என்று கூறினார்கள். சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு 1977ம் ஆண்டு ஜனதா கட்சி அரசின் கீழ் மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது. மண்டல் ஆணையத்தின் அறிக்கையானது 10 ஆண்டுகளாக நிலவறையில் அடைக்கப்பட்டு இருந்தது. அப்போது அரசும், அமைப்பும் யாருடைய கைகளில் இருந்தது? மண்டல் ஆணையம் செயல்படுத்தப்பட்டபோது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் அறிக்கை என்ன? காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்றார்.
The post சாதிவாரி கணக்கெடுப்பு கேம்சேஞ்சர் முடிவு: தர்மேந்திர பிரதான் பெருமிதம் appeared first on Dinakaran.