சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண்துடைப்பா?

2 weeks ago 5

10 பேரின் உணவை 100 பேருக்கு தருவதும், 100 பேரின் உணவை 10 பேருக்கு தருவதும் அநீதியாகும். இதே அநீதி இடஒதுக்கீட்டிலும் நடந்துவிடக்கூடாது. இட ஒதுக்கீட்டு உரிமையை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக்கொடுக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்றிய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ‘‘இடஒதுக்கீடு” என்பது உயர் சாதியினரால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவரவர் சாதியின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு சிறப்பான நடைமுறையாகும். எந்த சாதியை காட்டி ஒருவருக்கு கல்வியும், வேலையும் மறுக்கப்பட்டதோ? அதே சாதியை கணக்கில் கொண்டு அதே கல்வி, வேலையை, அதிகாரத்தை தந்து சமூக நீதியை நிலைநாட்ட இது உதவுகிறது. ஆனால், இந்த நடைமுறையில் குறைபாடு உள்ளதாக, இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும் அதற்கேற்ப இடஒதுக்கீடு தரப்படுவதில்லை என்ற ஆதங்கம் சமூக நீதியை விரும்பும் அனைவருக்கும் எப்போதுமே உண்டு. அதே நேரத்தில், எங்கள் சாதியினர் எண்ணிக்கை இவ்வளவு, ஆனால், கல்வி, வேலை வாய்ப்பில் எங்களுக்கு குறைவான இடங்களே கிடைக்கிறது. எனவே, எங்கள் சாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சாதி சங்கத்தினர் எழுப்பி வந்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கடந்த 1881-82ல் நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை 1931 வரை இடைவிடாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மக்களின் சாதி விவரம் கேட்கப்பட்டு அந்த விவரங்களுக்கு பொதுவில் வெளியிடப்பட்டன. 1941ல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் உலகப் போர் காரணமாக நிறுத்தப்பட, 1947ல் பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. அதன் பிறகு, 1951ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த முறை சாதி பற்றி கேள்வி இடம்பெறவில்லை. தேசிய ஒற்றுமைதான் முக்கியம், மக்களிடையே சாதி வேற்றுமை கூடாது என்பதற்காக அந்த கேள்வி தவிர்க்கப்பட்டதாக அப்போது தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் பற்றிய புள்ளிவிவரம் மட்டும் சேகரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதும், ஒன்றிய அரசின் கொள்கைபடி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் ஒவ்வொரு சாதியினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்ற குறை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.

சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் இல்லாததால், ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பொருளாதார கொள்கைகள், கல்வி கொள்கைகள் போன்றவற்றை வகுக்கும்போது மிகவும் சிரமமாகிவிடுகிறது. இதனால், தேவையானவர்களுக்கு தேவையானவை கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அதற்கு சாதிவாரி கணக்கெடுப்புதான் ஒரே வழி என்பதை உணர்ந்து, அதை தனது தேர்தல் பிரசார யுக்தியாக மாற்றினார் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் பிரசாரம் செய்தார். இதன் மூலம் விகிதாச்சார இடஒதுக்கீடு முறைப்படி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், பாஜவோ இதுபற்றி வாய் திறக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையை தொடர்ந்து எழுப்பி வரும் ராகுல் காந்தி , ‘‘நாட்டில் எத்தனை தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழை பொதுப் பிரிவினர் உள்ளனர் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளங்களில் அவர்களின் பங்கு என்ன என்பது நமக்குத் தெரியும்” என்றார்.

மக்களின் ஆசைகளை எவ்வளவுநாளுக்குதான் புறக்கணிக்க முடியும் பாஜவால். நெருங்கி வரும் பீகார் தேர்தலில் கண்ணுக்கு முன் தெரியும் தோல்வியை தவிர்க்க ஒரு ஆயுதமாக சாதி வாரி கணக்கெடுப்பை தற்போது பாஜ எடுத்துள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று ஏப்ரல் 30ம் தேதி அறிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் எந்தெந்த சாதியில் எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்ற தகவல் துல்லியமாக தெரிந்தால், சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தவும், அவர்களுக்காக கொள்கைகளை அரசு வகுப்பதற்கும் பெரிதும் உதவும். கண்துடைப்பா? 2021 ல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. நிலைமை சீரானதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்கலாம். ஆனால், அதற்கு மோடி அரசு ஏனோ தயாராக இல்லை. இப்போது, பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை குறிவைத்தே சாதிவாரி கணக்கெடுப்பு என்ற அஸ்திரத்தை பாஜ ஏவி உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஏனென்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பு எதுவும் அரசிடம் இருந்து வரவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மொத்தம் ஆகக்கூடிய செலவு ரூ.12,000 கோடி. ஆனால், அதற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ.524 கோடியைத்தான் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், 2026ல் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை 2031ல் நடத்த வேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை கணக்கெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 33 லட்சம் பேர் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கவே ஓராண்டாகிவிடும். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அரசு ஊழியர்கள் நேரில் சென்று கணக்கெடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சில மணித் துளிகள் செலவிட்டு விவரங்களை சேகரிக்க வேண்டியது அவசியம். மேலும், ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் சராசரியாக 30க்கும் மேற்பட்ட கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டு வந்துள்ளது. இப்போது சாதி பற்றிய கேள்வியும் சேர்க்கப்படும். அப்படி சேகரிக்கப்படும் தரவுகளை ஒன்று திரட்டி பகுப்பாய்வு செய்து சாதிவாரி உள்ளிட்ட விவரங்கள் வெளியாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும். எனவே பீகார் தேர்தலுக்கான வெறும் கண்துடைப்பு அறிவிப்பாகவே இது இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை ஒன்றிய அரசு கூடிய விரைவில் அறிவிப்பதுதான் ஒரே தீர்வு.

இடஒதுக்கீட்டின் முன்னோடி தமிழ்நாடு தமிழ்நாடு,சென்னை மாகாணமாக இருந்த காலகட்டத்தில் அரசு வேலை, கல்வி நிலையங்களில் பிராமணர்கள் மட்டுமே பெரும்பாலும் இருந்தனர். இது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த, நீதிக்கட்சியின் முன்னோடியான தென்இந்திய நலச்சங்கம் இந்த பிரச்னையை கையில் எடுத்தது. வேலைவாய்ப்பு பெரும்பாலும் பிராமணர்களுக்கே செல்வதாக குற்றம்சாட்டிய அவர்கள் பிற சமூகத்தினருக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 1920ல் நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தை கைப்பற்றி ஆட்சி அமைத்தது, நீதிக்கட்சி. பனகல் அரசர் முதல்வராக இருந்தபோது, பிராமணர் அல்லாதவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க கம்யூனல் ஜிஓ 1921ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஒரு அரசு அலுவலகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும்போது, பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%, பிராமணர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இடஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

The post சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண்துடைப்பா? appeared first on Dinakaran.

Read Entire Article