அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிபராக இருந்து மீண்டும் தேர்தலில் நின்று, அதில் தோற்று, அதன் பின்னர் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தலில் நின்று அதிபரான 131 ஆண்டு சாதனையை டிரம்ப் படைத்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க அரசியலில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார். அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் முன்னாள் அதிபர் குரோவர் கிளீவ்லேண்டின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். குரோவர் கிளீவ்லேண்ட் 131 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை மாளிகையிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிபரானார்.
குரோவர் கிளீவ்லேண்ட் கடந்த 1885ம் ஆண்டு முதல் 1889ம் ஆண்டு மற்றும் 1893-1897ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தார். அவருக்குப் பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்த இரண்டாவது தலைவர் என்ற பெருமையை டிரம்ப் பெற்றுள்ளார். டிரம்ப் எப்போதுமே செய்திகளின் நாயகன். அவரது அறிவிப்புகள் அதிரடியாக இருக்கும். இப்போது அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்றதும் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் 80 உத்தரவுகளை ரத்து செய்து அதிரடி காட்டியுள்ளார்.
அதிலும் குறிப்பாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ள டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய பல லட்சக்கணக்கானவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு தொடங்கவுள்ளது என்றும் தெரிவித்த டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் ‘அமெரிக்க வளைகுடா’ என மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைவிட இன்னும் ஒருபடி மேலே சென்று பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியது ஒரு முட்டாள்தனமான பரிசு என்று குறிப்பிட்ட டிரம்ப், பனாமா கால்வாயை தற்போது சீனா இயக்குகிறது. அதை சீனாவிடம் நாங்கள் கொடுக்கவில்லை. எனவே பனாமா கால்வாயை திரும்பப் பெறுவோம் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று தனது பதவியேற்பு விழாவில் உறுதிபூண்ட டிரம்ப், அமெரிக்கா தனது எல்லையை விரிவுபடுத்தும்.
நாங்கள் நட்சத்திரங்களை அடைந்து செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றுவோம் என்று உறுதிபூண்டார். எல்லாவற்றையும்விட அதிர்ச்சிகரமாக அமெரிக்க அரசு கொள்கையின் படி ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே இருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். அதாவது மூன்றாம் பாலினத்தவர், திருநங்கைகள் என்று தனிபாலினம் இனி கிடையாது என்று அறிவித்தார். உலகிலேயே அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம் உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்துவோம் என்று டிரம்ப் கூறினார். டிரம்பின் இந்த அறிவிப்பு இனி வரும் காலங்களில் இந்தியாவையும் பாதிக்கும்.
எண்ணெய் நுகர்வில் உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே உள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. எனவே டிரம்ப்பின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு சோதனை. அதேபோல் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றவாதிகளை வெளியேற்றும் உத்தரவிலும் அதிக இந்தியர்கள் பாதிக்கப்படலாம். அதே போல் கனடாவை ேபால் இந்தியாவுக்கும் அதிக வரி விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இன்னும் போகப்போக டிரம்ப் ஆட்சியின் சாதக, பாதகங்கள் தெரிய வரும். அப்போதுதான் உலகம் எந்த திசையில் பயணிக்கும் என்பது புரியும்.
The post சாதித்த டிரம்ப் appeared first on Dinakaran.