கடலூர், அக். 25: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆனந்த் (42), கருணாநிதி மகன் வெற்றிவேல் (30), ராமசாமி மகன் ராம்பிரகாஷ் (35), மதிவாணன் மகன் ராஜா (33), ராஜவேலு மகன் ஆதிமூலம் (37), மணி மகன் தமிழ்மணி (32) ஆகியோர் 2016ம் ஆண்டு பரவளூர் இருளர் காலனி பகுதியில் நடந்த பொங்கல் திருவிழாவின் போது, அங்கு வந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலரை சாதி பேரை கூறி திட்டியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், பன்னீர்செல்வம், கருப்புசாமி, அய்யப்பன், மணிகண்டன், அஜித்குமார், சரத்குமார், மேகலா ஆகியோர் இதை தட்டி கேட்டுள்ளனர். அப்போது இவர்களையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீதும் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள் மீது கடலூர் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி விஜயகுமார் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆனந்த், வெற்றிவேல், ராம் பிரகாஷ், ராஜா, ஆதிமூலம், தமிழ்மணி ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜராகி வாதாடினார்.
The post சாதி பெயரை கூறி திட்டி தாக்கிய வழக்கு 6 பேருக்கு தலா ஓராண்டு சிறை: கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.