![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36392640-sathaga-tharai.webp)
இறைவனது திருவருளைப் பெற ஜோதிட மகரிஷிகள் தெரிவித்த சுருக்க விபரம் என்னவென்றால் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்துக்கு சாதக தாரா நட்சத்திரத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என்பதே. ஏனென்றால் தெய்வ கடாட்சத்தை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது மனித சுபாவம்.
அவ்வகையில் ஒருவர் பிறந்த நேரத்தில் வான்வெளியில் உள்ள 27 நட்சத்திர மண்டலத்தில் எந்த நட்சத்திர மண்டலத்தில் சந்திரன் பயணிக்கிறதோ அதையே ஜென்ம நட்சத்திரமாக நிர்ணயிக்கப்பட்டது.
அதில் உள்ள ரகசியம் என்னவென்றால் ஒருவரது ஜென்ம நட்சத்திரம் எதுவோ அதன் திசா காலகட்டத்தில் முற்பிறவியில் அவர் இறந்திருப்பார். அவ்வாறு இறக்கும் சமயத்தில் மீதமாக இருந்த நட்சத்திர காலம் அவரது தற்போதைய பிறப்பிலிருந்து தசா புக்தியாக கணக்கிடப்படும் என்பது ஜோதிட ரகசியம்.
அவ்வகையில் ஜென்ம, சம்பத், விபத்து, க்ஷேம, பிரத்யக், சாதக, வதை, மித்ர, பரம மித்ர ஆகிய தாரா பலன்களை அன்றாட வாழ்வில் கணக்கிட்டு நம் முன்னோர்கள் வாழ்க்கையில் சந்தித்த பல சிக்கல்களை எளிமையாக கடந்தனர். அந்த சூட்சுமங்களை, ரகசியங்களை இன்றைய நடைமுறைக்கு ஏற்ப பயன்படுத்தி பல விஷயங்களில் வெற்றி பெறலாம்.
அவ்வகையில், ஒருவரது ஜென்ம நட்சத்திரத்துக்கு சாதக தாரா என்ற வகையில் இறையருளை அள்ளி வழங்கும் தெய்வ சக்திகள் எவை என்பது குறித்து பார்ப்போம்.
சாதக தாரை என்பது ஒருவரது பிறப்பு நட்சத்திரத்தை முதலாகக் கொண்டு எண்ணி வரக்கூடிய 6, 15, 24 ஆகிய நட்சத்திரங்கள் ஆகும். பிறப்பு நட்சத்திரத்தை ஒன்று என கணக்கில் கொள்ளவேண்டும். அதில் இருந்து தொடந்து எண்ணிக்கொண்டு வந்தால், சாதக தாரை நட்சத்திரங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
அவ்வகையில், அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்களது 6-ம் நட்சத்திரம் திருவாதிரை, 15-ம் நட்சத்திரம் சுவாதி, 24-ம் நட்சத்திரம் சதயம் ஆகும்.
இந்த நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்கள் :-
திருவாதிரை - நடராஜ சிவபெருமான்
சுவாதி - நரசிம்ம சுவாமி
சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வர சிவன்
இதேபோல் மற்ற நட்சத்திரங்களுக்கும் கணக்கிடலாம்.
பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் -
புனர்பூசம் - ஸ்ரீராமபிரான்
விசாகம் - முருகப்பெருமான்
பூரட்டாதி - ஏகபாத சிவபெருமான்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் -
பூசம் - சிவரூப தட்சிணாமூர்த்தி
அனுஷம் - லட்சுமி நாரயணர்
உத்திரட்டாதி - காமதேனு
ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள் -
ஆயில்யம் - ஆதிஷேசன்
கேட்டை - வராஹர் - ஹயக்கிரீவர்
ரேவதி - அரங்கநாதர்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் -
அஸ்வினி - சரஸ்வதி
மகம் - சூரியநாராயணர் மற்றும் வம்ச முன்னோர்
மூலம் - ஆஞ்சனேயர்
திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்கள் -
பரணி - அஷ்டதசபுஜ துர்காதேவி
பூரம் - ஆண்டாள்
பூராடம் - ஜம்புகேஸ்வர சிவன்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் -
கார்த்திகை - முருகப்பெருமான்
உத்திரம் - மகாலட்சுமி
உத்திராடம் - விநாயகர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் -
ரோகிணி - ஸ்ரீகிருஷ்ணர்
அஸ்தம் - காயத்திரி தேவி
திருவோணம் - ஹயக்கிரீவர்
ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் -
மிருகசீரிடம் - சந்திரசூடேஸ்வர சிவன்
சித்திரை - சக்கரத்தாழ்வார்
அவிட்டம் - ஸ்ரீ அனந்தசயன பெருமாள்.
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள மூன்று தெய்வங்களில் மனதிற்கு உகந்த ஒரு தெய்வத்தை அதே சாதக தாரா நாட்களில் வழிபட்டு படிப்படியாக வாழ்வில் உயரலாம் என்பது ஜோதிட நுட்பம். இந்த வழிபாடு மற்றும் தெய்வகடாட்சம் இருந்தால் சாதாரண மனிதர்கூட சாதனையாளராக உயர்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை. மேற்கண்ட விபரங்களின்படி தெய்வ வழிபாடு செய்வதை இயன்றவரை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து கடைபிடித்து வருவது பல நன்மைகளையும், வெற்றிகளையும் அளிக்கும்.
கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்