சென்னை,
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைதொடர்ந்து அந்தப்படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் சிங்கம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். பின்னர் இதன் இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தையும், அஜய் தேவ்கனை வைத்து இயக்கினார் ரோஹித் ஷெட்டி.
ஆனால் இங்கே தமிழில் வெளியான 'சிங்கம் 2' படத்தின் ரீமேக்காக அல்லாமல் புதிய கதையை வைத்து அந்தப்படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் ரோஹித் ஷெட்டி தற்போது மீண்டும் 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இதில் கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி போன்ற பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லர் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகள் கடந்த இந்தி பட டிரெய்லர் என்ற சாதனை படைத்துள்ளது. 24 மணி நேரத்தில் அனைத்து சமூக ஊடகங்களிலும் சேர்த்து 138 மில்லியன் (13 கோடியே 80) பார்வைகளை பெற்றுள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.