விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வந்தன. இந்தியாவின் மிகவும் திறன் வாய்ந்த செயற்கைக்கோளான ஜிசாட் என்2வை 4700 கிலோ எடை கொண்டது. இவ்வளவு எடை கொண்ட செயற்கை கோளை ஏவ இஸ்ரோ நிறுவனத்திடம் தற்போது ராக்கெட்டுகள் இல்லை.
எனவே, முதன்முறையாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் பால்கன் ராக்கெட்கள் மூலம் 8 ஆயிரத்து 300 கிலோ எடை கொண்ட செயற்கை கோள்கள் வரை ஏவ முடியும். புளோரிடாவின் கேப் கேனரவல் ஏவுதளத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் என்2 நேற்று அதிகாலை 12.01 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர், அதிகபட்சம் 36 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு கொண்ட புவி வட்டப் பாதையில் இது வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள தகவல் தொடர்பு செயற்கை கோள் 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வந்ததும் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைய இணைப்பை சுலபமாக வழங்கும். இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும். விமான பயணிகளும் மொபைல் இன்டர்நெட் வசதியை பெறமுடியும் என்று இஸ்ரோவின் வர்த்தக கூட்டு நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) அறிவித்துள்ளது.
இந்த செயற்கைகோளின் 80 சதவீத திறன் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் விமான மற்றும் கடல்சார் துறைகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படும். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி மிஷனுக்குத் தேவையான தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கு தேவையான தரவுகளை அளிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதிக எடைகொண்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவ அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனங்களை (என்ஜிஎல்வி) சுமார் 8,240 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன்மூலம் தற்போதைய பாகுபலி ராக்கெட்டின் திறனை மூன்று மடங்காக உயர்த்த முடியும் என இஸ்ரோ நம்புகிறது. இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய முதல் கட்டத்தைக் கொண்டிருக்கும். குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு 30 டன் வரையுள்ள செயற்கை கோள்களையும், புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு 10 டன் எடையுள்ள செயற்கை கோள்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதையும் சாதித்து காட்டும் இந்திய விஞ்ஞானிகளின் புதிய சாதனைகள் தொடரட்டும்.
The post சாதனை தொடரட்டும் appeared first on Dinakaran.