சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களை மிரட்டும் போக்கில் நிதி வழங்காமல் நிறுத்துவது உள்ளிட்ட நிர்வாக ரீதியான பிரச்னைகளையும் உருவாக்கி வருகிறது. ஒன்றிய அரசின் இது போன்ற நடவடிக்கைகளை சில மாநிலங்கள் கண்டித்தும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தங்களில் தமிழ்நாடு கைெயழுத்திட வேண்டும், இல்லை என்றால் நிதி வழங்க முடியாது என்றும் மிரட்டி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது கண்டனங்களை தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வருகிறது.
இதற்கிடையே, 3 மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற எந்த ஒரு கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த கருத்தை அரசியல் அமைப்பு சட்டத்தின் வழி நின்று வரவேற்கிறோம். அரசியல் அமைப்பு சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நமது நிதியை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
The post அமைச்சர் பதிலடி மிரட்டலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் appeared first on Dinakaran.