சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நாளை ஐதராபாத்தில் நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்சி – சென்னையின் எப்சி அணிகள் மோதுகின்றன. அந்த போட்டிக்கான பயிற்சி மற்றும் வியூகம் குறித்து சென்னையின் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஓவன் கோயல் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் ஆட்டத்தில் ஒடிஷாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தோம்.
ஆனால், 2வது ஆட்டத்தில் சொந்தமண்ணில் முகமதன் அணியிடம் தோல்வியை சந்தித்தது வருத்தமானதுதான். இத்தனைக்கும் அந்த ஆட்டத்தில் எங்கள் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுமார் 22 முறை கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சூழல் சரியாக அமையவில்லை. எனினும், அதனை ஐதராபாத் அணிக்கு எதிரான 3வது ஆட்டத்தில் இருந்து மாற்றும் திட்டத்துடன் சென்னையில் இருந்து புறப்படுகிறோம்.
அவர்கள் கடந்த சீசனில் எப்படி விளையாடினார்கள் என்பதை விட இந்த தொடரில் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் எங்கள் இலக்கு. கூடவே தமிழ் நாடு வீரர் எட்வின் சிட்னி வென்ஸ்பால் மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எத்தகைய சவாலையும் எதிர்கொள்வோம். இவ்வாறு கோயல் கூறினார். இந்த சந்திப்பின்போது சென்னையின் எப்சி கேப்டன் ரியான் எட்வர்ட் உடன் இருந்தார்.
The post சவாலை எதிர் கொள்வோம்…ஓவன் கோயல் உறுதி appeared first on Dinakaran.