சலுகை இருக்கு…. ஆனா இல்ல…. விலைவாசி உயர்ந்த அளவுக்கு கூட ருமான வரி உச்சவரம்பு ஈடு செய்யவில்லை: நடுத்தர மக்களுக்கு விடிவுகாலம் எப்போது?

1 month ago 4

மும்பை: விலைவாசி உயர்வுடன் கணக்கிடும்போது வருமான வரிச் சலுகை கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு புதிதாக வருமான வரிச்சலுகை வரம்பை உயர்த்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மீதான வரிச்சுமை கணிசமான அளவு குறைந்து விட்டதாக, ஒன்றிய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதாவது, 2013-14 நிதியாண்டில் ஆண்டு வருவாயாகரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை ஈட்டுவோர் சராசரியாக ரூ.25,000 வருமான வரி செலுத்தி வந்தனர். இதே வருவாய் பிரிவில் உள்ளவர்கள் இப்போது வரி எதுவும் செலுத்த தேவையில்லை. இந்த 10 ஆண்டுகளில் பண வீக்கத்தை (விலைவாசி உயர்வு) கணக்கிட்டால் ரூ.43,000 செலுத்த வேண்டி வரும். ஆனால், கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் சராசரியாக ரூ.43,000 மட்டுமே வரி செலுத்தியுள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், விலைவாசி உயர்வை கணக்கிடும்போது உண்மையில் அதற்கு ஈடான சலுகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, 2023-24 நிதியாண்டில் ஆண்டு தனிநபர் வருவாய் ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. அதன்பிறகு ஒன்றிய அரசு நடுத்தர மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், சில சலுகைகளை அறிவித்தது. பழைய வரி முறை, புதிய வரி முறை என 2 வித நடைமுறைகளை அறிவித்தது.

இதற்கான தனித்தனி படிவங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய வருமான வரி முறையில் காப்பீடு பிரீமியம், வீட்டுக்கடன் வட்டிக்கு வருமான வரி சலுகை பெறலாம். நிரந்தர வரிக்கழிவுடன் சேர்த்து ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. புதிய வரி முறையில், மேற்கண்ட முதலீடுகளுக்கு எந்தவித வரிச்சலுகையும் கிடைக்காது. ஆனால் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. நிரந்தர வரிக்கழிவுடன் சேர்த்து ரூ.7.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை. 2013-14 நிதியாண்டில் இருந்த வருமான வரி உச்சவரம்பின்படி ரூ.7 லட்சம் வருவாய் ஈட்டுவோர் ரூ.70,000,ரூ.15 லட்சம் ஈட்டுவோர் ரூ.2.8 லட்சம் வரி செலுத்த வேண்டும். நடப்பு ஆண்டில் புதிய வரி நடைமுறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை; ரூ.15 லட்சம் ஈட்டினால் ரூ.1.4 லட்சம் வரி செலுத்த வேண்டும். இதைக் குறிப்பிட்டு, வரிச்சுமையை குறைத்து விட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது.

உண்மையில், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பண வீக்கத்தைக் கணக்கிடும்போது, வரிச்சலுகை வரம்பு உயர்ந்து விட்டதாகக் கருத முடியாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது: கடந்த 2013-14 நிதியாண்டில் இருந்து, ஆண்டுக்கு 8 சதவீதம் அளவுக்கு பண வீக்கம் உயர்ந்ததாக கணக்கிட்டால் கூட, ரூ.2.5 லட்சம் வரம்புக்கு ஈடான நடப்பு ஆண்டு உச்சவரம்பு ரூ.5.13 லட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அடிப்படை வரிச்சலுகைக்கான வரம்பு ரூ.5 லட்சம் என நிர்ணயித்திருப்பது இதைவிட குறைவுதான். 8 சதவீதம் என்பது மிக குறைவான சராசரி தான். இதை 11 சதவீதம் என கணக்கிட்டால் நடப்பு நிதியாண்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சம் அளவுக்கு நெருங்கியிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால், காப்பீடு, வீட்டுக்கடன் வட்டி போன்றவற்றின் மீது கூடுதல் வரிச்சலுகை பெற முடியும். அதற்கும் இப்போது வழியில்லை. கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டியவர்கள் கூட, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு ஏற்ப வரிக்கழிவு போக ரூ.29,000 செலுத்தினால் போதும். எனவே, புதிய வரிப்பிரிவின்படி ரூ.7 லட்சம் வரை சலுகை அளிப்பதை வரம்பு உயர்ந்து விட்டதாக கருதத் தேவையில்லை, என்றனர்.

 

The post சலுகை இருக்கு…. ஆனா இல்ல…. விலைவாசி உயர்ந்த அளவுக்கு கூட ருமான வரி உச்சவரம்பு ஈடு செய்யவில்லை: நடுத்தர மக்களுக்கு விடிவுகாலம் எப்போது? appeared first on Dinakaran.

Read Entire Article