
ராய்பூர்,
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ராயுடு 63 ரன்களும், சவுரப் திவாரி 60 ரன்களும், குர்கீரத் சிங் 46 ரன்களும், யுவராஜ் 49 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 254 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டுவைன் சுமித் 79 ரன்கள், வில்லியம் பெர்கின்ஸ் 52 ரன்கள் அடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட் வீழ்த்தினார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் சேர்த்து 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி பெற்றுள்ள இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.