
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோப்பையையும் தட்டி சென்றது.
இந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கே.எல். ராகுல் 34 ரன்கள் (33 பந்துகள் 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து, 103.03 ஸ்டிரைக் ரேட்டுடன் அணி வெற்றி பெற உதவினார். போட்டி முடிந்த பின்னர் பேசிய ராகுல், அடுத்து அணிக்காக விளையாட 2 பேட்ஸ்மேன்கள் இருந்தனர். ஆனால், நான் பதற்றத்திலேயே இருந்தேன்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்களை நீங்களே எப்படி அமைதிப்படுத்தி கொண்டு மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும் என்பதிலேயே கவனம் தேவையாக இருந்தது. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் 5-ல் 3 போட்டிகளில் இதுபோன்ற தருணங்களில் பேட்டிங் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
இதில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடவில்லை. உண்மையான திறமையுடன் நாங்கள் அனைவரும் எங்களுடைய கிரிக்கெட்டை விளையாடிய விதம் வார்த்தைகளால் கூறி விட முடியாது. நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
பேட்டிங் செய்யும்போது, நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பி.சி.சி.ஐ. எங்களை வளர்த்தெடுத்த விதம் மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் ஆகியன நெருக்கடியை எதிர்கொள்ளவும் மற்றும் இதுபோன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படவும் எங்களுக்கு நன்றாக பயிற்சியளித்து இருந்தது என்று கூறியுள்ளார்.
இந்த போட்டியில் நெருக்கடியான தருணத்தில் அமைதியாக செயல்பட்டு அணியின் வெற்றிக்காக விளையாடினார் என ராகுலை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
4 விக்கெட்டுகளை கைப்பற்றி, 4 இன்னிங்ஸ்களில் 99 ரன்களை சேர்த்த ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, அமைதியாக சூழலை எதிர்கொண்டதற்காக மற்றும் ஆழ்ந்த திறமைக்காக ராகுலுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். சரியான நேரத்தில், தனக்கான வாய்ப்புகளை ராகுல் பயன்படுத்தி கொண்டார்.
அவர் பந்துகளை எதிர்கொண்டது போன்று வேறு யாராலும் செய்திருக்க முடியும் என்று என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில், எதிரணியால் கணிக்க முடியாத அளவுக்கு பந்துகளை ராகுல் அமைதியாக எதிர்கொண்ட விதம் அணி வெற்றி பெற உதவியது. முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தபோதும், சூழலை அடுத்தடுத்து சரியாக கையாண்டார்.
இதனை குறிப்பிட்டே ரோகித், பாண்ட்யா உள்ளிட்டோர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். எனினும், வெளியில் அமைதியாக காட்டி கொண்டபோதும், உள்ளுக்குள் பதற்றத்துடனேயே இருந்தேன் என பேட்டியின்போது ராகுல் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.