
ராய்பூர்,
இந்தியாவில் நடைபெற்று வரும் முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் அம்புரோஸ் 69 ரன்களும், மோர்கன் 64 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மார்ஷ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த டேனியல் கிறிஸ்டியன் - நாதன் ரியார்டான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் கிறிஸ்டியன் 61 ரன்களிலும், ரியார்டான் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை மிடில் ஓவர்களில் இங்கிலாந்து வீழ்த்தி நெருக்கடி கொடுத்தது.
இருப்பினும் நெருக்கடியை சமாளித்த ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் இன்று மோதுகிறது.
நாளை நடைபெறுகின்ற 2-வது அரையிறுதியில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.