
ஷார்ஜா,
வங்காளதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் சதம் விளாசினார். யு.ஏ.இ. தரப்பில் ஜவதுல்லா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யு.ஏ.இ. 20 ஓவர்களில் 164 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பர்வேஸ் ஹொசைன் வெறும் 53 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த வங்காளதேச வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் தமிம் இக்பால் 60 பந்துகளில் சதமடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பர்வேஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த 2-வது வங்காளதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.