
துபாய்,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளனர்.
அதாவது, இந்த ஆட்டத்தில் குல்தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். அதேபோல், இந்த ஆட்டத்தில் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.