
பிரதோச வழிபாடு என்பது சிவ வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான வழிபாடாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினமே பிரதோஷ தினமாகும். திரயோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். அதுவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அதனால்தான் அதனை சனி மஹா பிரதோஷம் என்று அழைக்கிறோம்.
பொதுவாக பிரதோஷ நாளில் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதுடன், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பிரதோஷ வேளையில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும், அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சனி பிரதோஷ நாளில் விரதம் இருநது வழிபட்டால், சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகி நன்மை கிடைக்கும் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கர்ம வினைகளூக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனி, அஷ்டமச் சனி காலக்கட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பக்வானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்கவேண்டும். பிரதோஷ விரத பூஜையை மாலை நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.
சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. இந்த பிரதோஷ நாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்களும் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும், மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும், படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நாளை மறுதினம் (24.5.2025) சனி பிரதோஷம் வருகிறது. அன்றைய தினம் பிரதோஷ வேளையில் (மாலை) ஆலயங்களில் சிவபெருமான், பார்வதி, நந்திதேவர் மற்றும் விநாயகரை வழிபடுவது சிறப்பு. சிவலிங்கத்திற்கு பால் மற்றும் தண்ணீரால் அபிஷேகம் செய்யலாம். நந்திக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.