சேட்டைக்கார குரங்கு ஒன்று காட்டின் மரத்தில் வாழ்ந்து வந்தது. அந்த மரத்தின் கீழே அந்த காட்டின் ராஜாவாகிய சிங்கம் தினமும் ஓய்வு நேரத்தில் வந்து உறங்கும். அந்த சிங்கம் தூங்கிக்கொண்டு இருக்கும்போது, இந்த குரங்கு மெல்ல நடந்து போய், காதின் ஒரு பக்கமாய் தட்டிவிட்டு, மறுதிசையில் ஓடிப்போகும். காதின் திசையில் திரும்பி பார்க்கும் சிங்கம், யாரும் இல்லாததைக் கண்டு மீண்டும் செவ்வனே தூங்கும். இந்த சேட்டையை தினமும் செய்து, ‘காட்டின் ராஜாவையே ஏமாற்றுகிறோம்’ என்று தனக்குத்தானே மகிழ்ந்ததுடன், இதுவரை ராஜாவால் தன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைத்து குரங்கு பெருமை கொண்டது.
இந்த தினசரி நடவடிக்கையை நரி ஒன்று நோட்டமிட்டு வந்தது. ஒருநாள் குரங்கு மரத்தில் இருந்து கீழே வரும்போது, அதை வேட்டையாட முடிவு செய்தது. ஆகவே சிங்கம் தூங்கும் நேரம், நரி புதரின் ஓரமாய் பதுங்கி கொண்டு, குரங்கின் வருகைக்காக காத்திருந்தது. வழக்கம்போல குரங்கு தனது சேட்டையை செய்ய மரத்திலிருந்து கீழே இறங்கி சிங்கத்தை நெருங்கியது, இதுதான் சமயம் என்று, மறைந்திருந்த நரி, குரங்கை வேட்டையாட பாய்ந்து வந்தது. குரங்கை தொடுவதற்கு முன்பு ஒரு கணநேரத்தில், அதுவரை அமைதியாக படுத்திருந்த சிங்கம் தனது பலத்த கைகளால் நரியை ஓங்கி இடிபோல தாக்கியது. நரி புதரைத் தாண்டி போய் விழ, சிங்கம் மீண்டும் செவ்வனே படுத்துக் கொண்டது. என்ன நடந்தது என்பது புரியாமல், குரங்கின் கால்கள் நடுநடுங்க மரண பயத்தில் குரங்கு மீண்டும் மரத்தில் ஏறிக் கொண்டது.
இறைமக்களே, குரங்கை தாக்க வந்த நரியின் சூழ்ச்சியை அறிந்த சிங்கத்திற்கு, குரங்கின் சேட்டை தெரியாமலா இருந்திருக்கும்? சிங்கம் அமைதியாக இருந்ததால் அது ஒன்றையுமே கவனிக்கவில்லை என குரங்கு தனது மதியீனத்தால் தப்புக்கணக்கு போட்டது. அதுபோலத்தான் தேவன் சில நேரங்களில் அமைதியாக இருக்கிறார் என்பதால், அவர் செயல்படாமல் இருக்கிறார் என்பது பொருளல்ல.
‘‘தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்’’ (1 யோவான் 3:20) என இறைவேதம் கூறுகிறது. தேவன் சர்வ வியாபி மட்டுமல்ல சர்வ ஞானி என்பதை இவ்வசனம் எடுத்துரைக்கிறது.
கடவுளுக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவருக்கு முன் நமது கிரியைகள் அனைத்தும் பட்டப் பகல் போல வெளியரங்கமாக உள்ளது. எனவே அவர் ஏற்ற காலத்தில், ஏற்ற கிரியைகளை செய்ய வல்லவராக இருக்கிறார். நம்மை காட்டிலும் நம் மீது அக்கறை கொண்டவர் என்பதை விசுவாசிப்போம். மேலும், நாம் தவறிழைக்கும் போது, தண்டித்து நம்மை அழிக்க விரும்பாமல், மனந்திரும்ப வாய்ப்புகள் கொடுத்து, பொறுமையாக இருக்கிறார். எனவே கிருபையின் காலத்து வாய்ப்புகளில் மனந்திரும்பிவிடுவது நல்லது.
– அருள்முனைவர்: பெ. பெவிஸ்டன்.