தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிற்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!!

3 hours ago 2

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிற்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில், சமூகவியல் துறை, ‘சென்டர் பார் சவுத் இண்டியன் ஸ்டடீஸ்’ அமைப்பின் சார்பிலான, இந்தஸ் நாகரிகம் சார்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பார்வைகள்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார்.

அங்கு அவர் எப்போதும் போல் வரலாற்று அறிவு சிறிதும் இல்லாமல் கதை அளந்து இருக்கிறார்.

“மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்து பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சிந்து நாகரிகம் என்று மட்டும் சொல்லாமல் சரஸ்வதியை சேர்ந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும்.

மஹாபாரதத்தில், கிருஷ்ணனின் அண்ணன், சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை, நாசாவின் செயற்கைக்கோள் படம் உறுதிப்படுத்தி விட்டது. சட்லெஜுக்கும், யமுனைக்கும் இடையில் ஓடியதை அது விளக்கியது. அது, 2,500 ஆண்டுகளுக்கு முன் வற்றி இருக்கலாம் என, கருதப்படுகிறது” என்றெல்லாம் ஆர்.என்.ரவி தனது மேதமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதைத் தன் குறிக்கோள்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இதுவரை அறிவியல் ரீதியான சான்று ஏதும் கிடைத்திராத ஓர் தொன்மத்தைக் குறித்து “ஆராய்ச்சி”யாளராக மாறிய ஆளுநர் ஆர்.என். ரவி திரிபுவாதத்தை முன் வைத்திருக்கிறார்.

சரஸ்வதி நதியைப் பற்றிய புராணச் சித்தரிப்புகள் புவியியலுடனோ வரலாற்றுடனோ சற்றும் பொருந்திப் போகவில்லை என்பதை பல வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.

மேலும், “ஆரியர்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் சிலர் நூல்களை எழுதுகிறார்கள். நச்சு விதையை பரப்புகிறார்கள்” என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

‘ஆரியன்’ என்ற வார்த்தை, வேதத்தில் உள்ளது. ‘அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயர்ந்த எண்ணம் உள்ளவர் தான் ஆரியன்’ என்கிறது. அதாவது, அய்யா என்ற தமிழ் வார்த்தையின், பிராகிருத வார்த்தை தான் ஆரியன்.

“ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம். இந்தியா மீது ஆரியர் படையெடுத்தனர்” என்பதெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட, பரப்பப்பட்ட கதை. நம்மில் பலரும் அதை உண்மை என்று நினைக்கின்றனர். ஆரியர்களை ‘வந்தேறிகள்’ என்று தவறாக சித்தரித்தார் ஈ.வெ.ராமசாமி. அந்த கருத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சித்தார்.

மொழிவாரியாக நாம் பிரிக்கப்பட்டுள்ளோம். இது ஒற்றுமைக்கு எதிராக உள்ளது” என்றெல்லாம் விஷமத்தனத்தோடு பேசி உள்ளார்.

ஆங்கில இந்து நாளிதழில் 17.06.2017 அன்று டோனி ஜோசப் என்பவர் டிஎன்ஏ அடிப்படையில் இந்தியாவில் ஆரியர்களின் வருகை என்பது நிச்சயம் நடந்த ஒன்று என்று மெய்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கின்றார். அதில் தந்தை வழியில் கடத்தப்படும் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து ஆரியர்களின் வருகை என்பது இந்தியாவிற்கு வெளியில் இருந்துதான் நிச்சயம் நிகழ்ந்தது என்பதை நிறுவியிருக்கின்றார். இன்னும் பல ஆய்வுகள் ஆரியர்கள் பற்றிய தெளிவான உண்மையை வெளிப்படுத்தி இருக்கின்றன.

ஆனால் ஆளுநர் ஆர். என்.ரவி ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று தொடர்ந்து பிதற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது.

மேலும் “இந்தியா சுதந்திரத்துக்காக போராடிய போது, இதன் ஒற்றுமையைக் கெடுக்க, 20 கட்டுக்கதைகளை கட்டுரைகளாக எழுதி காரல் மார்க்ஸ் வெளியிட்டார் என்று மார்க்ஸ் மீது வன்மத்தைக் கக்கி உள்ளார். நாள்தோறும் தனது உளறல்கள் மூலம் ஆளுநர் பொறுப்பிற்கு தான் தகுதியற்றவர் என்பதை ஆர்.என்.ரவி நிரூபித்து வருகிறார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிற்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!! appeared first on Dinakaran.

Read Entire Article