சென்னை: பாலியல் தொழிலாளி பற்றி ஆபாசமாக கருத்து கூறியிருந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பாலியல் தொழிலாளி ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து கொச்சையான கருத்துகளை பேசியிருந்தார். பொதுக்கூட்ட மேடையில் பொன்முடி பேசிய காணொலி சமூகஊடகங்களில் வைரலானது.
இதை பார்த்த பலரும் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி, அமைச்சர் பொன்முடிக்கு நேற்று காலை கடும் கண்டனம் தெரிவித்து சமூகவலைதள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காக பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘‘கழக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, அவர் வகித்து வரும் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என அதிரடியாக அறிவித்தார். திமுக பொதுக்கூட்ட மேடைகளில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றது. ஏற்கனவே பெண்கள் இலவச பேருந்து சேவை தொடர்பாக பொன்முடி பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்ததை தொடர்ந்து மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பொன்முடியிடம் இருந்த உயர் கல்வித் துறை பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது. தற்போது அவரது பேச்சுக்காக கட்சி பதவியை அதிரடியாக பறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* துணை பொதுச்செயலாளரானார் திருச்சி சிவா
பொன்முடி நீக்கப்பட்டதை அடுத்து, திருச்சி சிவா எம்பி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ”கழக கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்பி, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருச்சி சிவா எம்பி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தயாநிதி மாறன் எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.