மும்பை,
யூடியூபர் சமய் ரெய்னா நடத்தும் பிரபலமான நிகழ்ச்சி 'இண்டியா'ஸ் காட் டேலண்ட் . இதை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபரான ரன்வீர் அல்லாபடியா அருவருக்கத்த வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடத்தும் சமய் ரெய்னா மீதும், ஆபாசமாக பேசிய ரன்வீர் அல்லாபடியா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, அசாம் போலீசார் ரன்வீர் அல்லாபடியா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் தனது கருத்துக்கு அல்லாபடியா மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த வீடியோவும் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், யூடியூபர் ரன்வீர் அல்லாபடியாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, குழுவின் முன் ஆஜராகி சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.