![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38893191-peria-avudayar-temple.webp)
திண்டுக்கல் அருகே உள்ள மானூர் பகுதியில் உள்ளது பெரியாவுடையார் திருக்கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்பகுதியில் தான் இருப்பதை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் ஒரு திருவிளையாடலை புரிந்தார்.
முற்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த, விராட மகாராஜாவுக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் விருப்பம். ஒரு நாள் காட்டிற்கு சென்றான் மன்னன். அப்போது சிவபெருமான், மான் உருவம் கொண்டு மன்னனின் முன்பாகப் போய் நின்றார். மயக்கும் அழகைக் கொண்டு காட்சியளித்த அந்த மானை பிடிப்பதற்காக பின் தொடர்ந்தான் விராட மன்னன். ஆனால் மானோ சிக்குவதாக இல்லை. முடிவில் மான் ஒரு புதருக்குள் சென்று மறைந்து கொண்டது.
இதனால் கோபம் கொண்ட மன்னன், புதரை நோக்கி அம்பு எய்தான். அப்போது அந்த புதருக்குள் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பயந்து போன மன்னன், உடனடியாக புதரை விலக்கிப் பார்த்தான். அங்கு சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதன் மீது இருந்துதான் ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது.
தான் செய்த பிழையை பொறுத்தருளும்படி, இறைவனிடம் வேண்டினான் மன்னன். அப்போது இறைவன் அசரீரியாக வெளிப்பட்டு, "நான் இங்கு இருப்பதை வெளிப்படுத்தவே, இப்படி ஒரு நாடகத்தை நடத்தினேன்" என்று கூறினார். பின்னர், இறைவனின் கட்டளைப்படி, சிவலிங்கம் இருந்த இடத்திலேயே மன்னன் ஒரு கோவிலை அமைத்து பூஜை செய்தான். மன்னன் மானை துரத்தி வந்ததால் இந்த ஊர் மானூர் என்றானது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்போது, அம்பு பட்ட தழும்பை காணலாம்.