![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38893957-gt.webp)
காசா சிட்டி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் , காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் 48 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் பிடியில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமாகவும் இஸ்ரேல் மீட்டது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட பணய கைதிகளில் சிலரின் உடல்களையும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
இதனிடையே, ஓராண்டுக்குமேல் நீடித்துவந்த போர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈராக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38894023-dyry.webp)
அந்த ஒப்பந்தபடி, தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களில் 21 பேரை விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக பாலஸ்தீனியர்கள் 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை வரும் சனிக்கிழமை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறிவிட்டதாகவும், ஒப்பந்ததை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பணய கைதிகளை விடுதலை செய்வோம் என்றும் ஹமாஸ் ஆயுதக்குழு மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், ஒப்பந்தத்தை ஹமாஸ் ஆயுதக்குழு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சனிக்கிழமை பணய கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வரும் சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லையென்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, இது தனது கருத்து என்றும் பணய கைதிகள் விவகாரத்தில் இஸ்ரேலே முடிவுகள் எடுக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மிரட்டலுக்கு மதிப்பு கிடையாது என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் ஆயுதக்குழு செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இரு தரப்புக்கும் இடையே (இஸ்ரேல், ஹமாஸ்) போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் மதிக்க வேண்டும் என்பதை டிரம்ப் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டிரம்ப்பின் மிரட்டல் மொழிக்கு மதிப்பு கிடையாது. இந்த மிரட்டல் ஒப்பந்தத்தை மேலும் சிக்கலாக்கும்' என்றார்.
தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கால அவகாசம் மார்ச் மாத முதல் வாரம் வரை ஆகும். அதன்பின்னர், ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். இதனால், போர் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் வரும் சனிக்கிழமை பணய கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவில்லையென்றால் காசாவில் மீண்டும் போரை தொடர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்புப்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. மேலும், போருக்கான நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தயார் படுத்தி வருகிறது. இதன் மூலம் சனிக்கிழமை பணய கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவில்லையென்றால் காசாவில் போர் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.